மணலி விரைவு சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
மணலி விரைவு சாலையில் மழைநீர் வெள்ளம் குளம்போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் மணலி விரைவு சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது.
சாலையின் இடதுபுறம் மழைநீர் அதிக அளவு தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடுப்பு சுவர் உடைப்பு
இதையடுத்து அங்கு வந்த சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் மற்றும் அதிகாரிகள் சாலையின் நடுவே தடுப்பு சுவர் இருப்பதால் அடுத்தபுறம் வெள்ளநீர் செல்ல முடியவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை தடுப்பு சுவரை உடைத்து தண்ணீரை சாலையின் மறுபுறம் செல்ல வழி வகை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மணலி விரைவு சாலையில் போக்குவரத்து சீரானது.
குடிசைகள் பாதிப்பு
கார்கில் நகரிலுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகளை மழைநீர் சூழ்ந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அனைத்து தெருக்களிலும் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கி உள்ளது. அவற்றை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் தொழிற்சாலை மூலம் மதிய உணவு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story