வீட்டை தானமாக எழுதி வாங்கிவிட்டு, தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய நடவடிக்கை
வீட்டை தானமாக எழுதி வாங்கி விட்டு தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு சப்-கலெக்டர் பரிந்துரை செய்தார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம், கூடலூர் முத்துச்சாமி அய்யா தெருவை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மனைவி சின்னம்மாள் (வயது 75). இவர்களுக்கு சாந்தி என்ற மகளும், சிவக்குமார், கண்ணன் என்ற 2 மகன்களும் உள்ளனர். காமாட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாந்தி தனது குடும்பத்தினருடன் கோவை மாவட்டம் ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். மகன்கள் 2 பேரும் கூடலூரில் வசித்து வருகின்றனர். கோவையில் தனது மகளுடன் சின்னம்மாள் வசித்து வந்தார்.
கூடலூரில் சின்னம்மாளுக்கு சொந்தமாக வீடு ஒன்று இருந்தது. அதனை கடந்த 2016-ம் ஆண்டு சாந்தி மற்றும் பேரன் முகேஷ் ஆகியோருக்கு தானமாக வழங்குவதாக கம்பம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சின்னம்மாள் எழுதி கொடுத்து பத்திர பதிவு செய்தனர். பின்னர் சின்னம்மாள் கோவையில் உள்ள ராசிபாளையத்தில் மகள் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் சின்னம்மாளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூருக்கு சாந்தி அனுப்பியதாக தெரிகிறது. அங்கு அவர் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்தார். கூடலூரில் இருந்த மகன்களும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சின்னம்மாள் உத்தமபாளையத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சென்று தங்கினார். இந்நிலையில் முதியோர் காப்பகத்திற்கு சென்று உத்தமபாளையம் சப்- கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு செய்தார். அப்போது முதியோர்களை சந்தித்து அவர் பேசினார். அவரிடம் சின்னம்மாள் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் தனது பெயரில் இருந்த வீட்டை தானமாக எழுதி வாங்கிவிட்டு, பராமரிக்காமல் மகள் விட்டு விட்டதாகவும், மகன்களும் உதவி செய்யவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
அந்த புகாரின்பேரில் சின்னம்மாளின் மகள் மற்றும் மகன்களை அழைத்து அவர் விசாரணை நடத்தினார். பின்னர் மகள் மற்றும் பேரனுக்கு தானமாக எழுதி கொடுத்து பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய சார்பதிவாளருக்கு பரிந்துரை செய்து ஆணையை சின்னம்மாளிடம் சப்-கலெக்டர் நேற்று வழங்கினார்.
மேலும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்கள் சிவக்குமார், கண்ணன் ஆகியோர் மாதந்தோறும் மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ.2 ஆயிரத்தை சின்னம்மாளுக்கு வழங்கவேண்டும் என்று சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story