கடல் சீற்றம் எதிரொலி: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம் எதிரொலி: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 10:46 PM GMT)

கடல் சீற்றம் எதிரொலியாக கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடலூர் முதுநகர்,

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது குமரி கடல் பகுதியில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகி புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் கடல் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது. துறைமுக முகத்துவாரத்தில் அலைகள் சீறி பாய்ந்து வருவதால் படகுகள் கவிழும் நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம் உள்பட பல்வேறு கிராம மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். ஒரு சில மீனவர்கள் ஏற்கனவே கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்களை பிடித்து விட்டு உடனடியாக துறைமுகத்துக்கு வந்து விட்டனர். ஆனால் விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் கரைக்கு திரும்பவில்லை. அவர்கள் நடுக்கடலில் படகில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

கடலூர் தாழங்குடாவில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். படகுகளை அலைகள் இழுத்து செல்லாதபடி கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்களில் படகுகளை கட்டி வைத்துள்ளனர்.

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது பற்றி மீனவ கிராம முக்கியஸ்தர்களுக்கும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story