தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில், பிரசவத்தின்போது பெண் திடீர் சாவு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில், பிரசவத்தின்போது பெண் திடீர் சாவு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது பெண் திடீரென இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி பிரியா(வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த பிரியாவை பிரசவத்திற்காக பாரூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரியா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியா திடீரென உயிரிழந்தார். இந்த தகவலை பிரியாவின் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு திரண்ட உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்காததே பிரியா இறப்புக்கு காரணம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தர்மபுரி-சேலம் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபடவும் முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பிரியாவின் உறவினர்கள் கூறுகையில், பிரியாவை நல்ல நிலையில்தான் சிகிச்சைக்கு சேர்த்தோம். டாக்டர்களின் கண்காணிப்பின்றி நர்சுகள் மூலமாக பிரசவம் நடந்துள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட குறைபாடே இறப்புக்கு காரணம். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், பிரியாவிற்கு அளிக்கப்பட்ட பிரசவ சிகிச்சையில் மருத்துவ வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளன. பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிரியா உயிரிழந்து உள்ளார் என்று தெரிவித்தனர்.

Next Story