மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி செல்போன் வரும்? எனது பரோல், விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது - முருகன் பரபரப்பு பேட்டி + "||" + How to get a cell phone without the authorities? My parole, conspiracy to prevent release Murugan Furore Interview

அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி செல்போன் வரும்? எனது பரோல், விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது - முருகன் பரபரப்பு பேட்டி

அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி செல்போன் வரும்? எனது பரோல், விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது - முருகன் பரபரப்பு பேட்டி
அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி எனது அறைக்கு செல்போன் வரும் என்றும், எனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது என்றும் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிறையில் அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு ஒருமுறை நளினியை சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகன் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார்.

நளினிஉண்ணாவிரதம் நீடிப்பு

இதனால் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருடைய உண்ணாவிரதம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. இதனால் அவருடைய உடல்நிலைகுறித்து சிறை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். சிறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக முருகன், அவருடைய வக்கீலிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக முருகனை நேற்று போலீசார் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். அவர் காவி வேட்டி, துண்டு அணிந்திருந்தார், உண்ணாவிரதம் இருப்பதால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவரை போலீசார் கைத்தாங்கலாக கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு நிஷா ஒத்திவைத்தார்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மூச்சுக்காற்றுக் கூட விட முடியாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் எப்படி எனது அறைக்கு செல்போன் வரும். அவர்களுக்கு தெரியாமல் வருவதற்கு வாய்ப்பில்லை. இதன் மூலம் எனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது.

நான் கடந்த ஒரு மாதமாக புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்தேன். அப்போது ஒருவேளை பழம் மட்டும் சாப்பிட்டு வந்தேன். அதை அதிகாரிகள் பிச்சைபோடுவது போன்று போட்டார்கள். ஆன்மிகவாதியாக கூட வாழவிடுவதில்லை. திட்டமிட்டு கெடுக்கிறார்கள்.

என்னை தனிமைச்சிறையில் அடைத்துள்ளார்கள். இதனை கண்டித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். இதைவிட வேறு என்ன கொடுமை வேண்டும். முதல்- அமைச்சருக்கு நான் அனுப்பிய கடிதத்தை 7 நாட்கள் எங்கும் அனுப்பாமல் வைத்துக் கொண்டார்கள். எனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.