மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: குன்னூர், கோத்தகிரியில் மண் சரிவு; பாறைகள் உருண்டு விழுந்தன + "||" + Heavy rains in Nilgiris district: Soil degradation at Gothagiri, Coonoor

நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: குன்னூர், கோத்தகிரியில் மண் சரிவு; பாறைகள் உருண்டு விழுந்தன

நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பு: குன்னூர், கோத்தகிரியில் மண் சரிவு; பாறைகள் உருண்டு விழுந்தன
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால், குன்னூர், கோத்தகிரியில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்து இருந்த மழை மீண்டும் கனமழையாக நீடிக்கிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, குந்தா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன.

ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா, ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூ ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்தன. நேற்று காலை ஊட்டி அருகே கவர்னர்சோலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. அப்போது நள்ளிரவு 1 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார், புதுக்காடு, கே.என்.ஆர். நகர் உள்பட 5 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் மண் சரிவும் ஏற்பட்டது. அப்போது சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். பின்னர் கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விட்டனர். இதைத்தொடர்ந்து சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றும் பணியிலும், மண் சரிவை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். அந்த பணி நேற்று மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக அந்த சாலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இதேபோன்று குன்னூர்-மஞ்சூர் சாலையில் கோடேரி அருகில் மண் சரிவு ஏற்பட் டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மண் சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர்-பெட்போர்டு சாலையில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் தனியார் பள்ளிக்கு செல்லும் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்கள், கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தன. இது தவிர குன்னூர் டி.டி.கே. சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவர் இடிந்தது.

இந்த நிலையில் குன்னூர் பகுதியில் மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தமிழக பேரிடர் மீட்பு குழு சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் தலைமையில் 40 பேர் வந்தனர். இங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை அவர்களுக்கு விளக்கினார். மேலும் கோவையில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 60 வீரர்கள் வந்து உள்ளனர். இது தவிர தீயணைப்புத்துறை சார்பில் 2 நடமாடும் வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் கட்டபெட்டு-கக்குச்சி சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் கிளப்ரோடு பகுதிக்கு செல்லும் சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. அதை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். இது தவிர கன்னிகாதேவி காலனி, ஹேப்பிவேலி, அரவேனு, கைத்தளா உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் இடிந்தன. கோத்தகிரி-குன்னூர் சாலையில் கட்டபெட்டு அருகில் பாறைகள் உருண்டு விழுந்தன. அதை நெடுஞ்சாலைத்துறையினர் உடைத்து அப்புறப்படுத்தினர்.

காவிலோரையில் தாழ்வான இடங்களில் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அதில் 1½ ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட் பயிர்கள் சேதம் அடைந்தன. கரிக்கையூரில் ராமக்கா, குமாரமுடியில் ரகு, கோடநாட்டில் ராக்கி, குமரன் காலனியில் சேகர் ஆகியோரது வீடுகள் இடிந்தன. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர். இடிந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.4 ஆயிரத்து 100 வழங்கினர். கோத்தகிரி பஸ் நிலைய கட்டிடத்தின் மீது தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்குள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, வங்கி ஏ.டி.எம். மையம் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.

கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் முக்கிய பஜார்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோன்று பந்தலூர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் புஞ்சைக்கொல்லி, காரக்கொல்லி பகுதியில் நேற்று அதிகாலையில் மூங்கில்கள் சரிந்தது. இதனால் காலை 11 மணி வரை அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. கனமழை காரணமாக பந்தலூர் தாலுகா மற்றும் தேவாலா பகுதியில் பள்ளிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் அமீரகம்
வரலாறு காணாத கனமழையால் அமீரகம் வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
2. பெரும்பாறை அருகே, கன மழையால் வீடு இடிந்தது
பெரும்பாறை அருகே கனமழையால் கூலித்தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது.
3. புதுச்சேரியில் கனமழை; காரைக்காலில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் கனமழையை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. கனமழை; பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரில் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழையால் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கடலூரின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. கனமழை; ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.