3 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை: கொடைக்கானலில் 10 இடங்களில் மண்சரிவு


3 நாட்களாக வெளுத்து வாங்கும் மழை: கொடைக்கானலில் 10 இடங்களில் மண்சரிவு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 5:36 PM GMT)

கொடைக்கானலில் 3 நாட்களாக வெளுத்து வாங்கும் மழையால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி போட் கிளப்பில் 140 மி.மீட்டர் மழை பதிவானது.

இந்த மழை காரணமாக கொடைக்கானல் நகரில் இருந்து பெருமாள்மலை, அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங் களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களிலும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார் தலைமையிலான ஊழியர்கள், 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங் களின் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மலைப்பாதையில் கிடந்த மண்ணும், பாறைகளும் அகற்றப்பட்ட பிறகு இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பல்வேறு இடங்களில் பாறைகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. அவை உருண்டு விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் உள்ள ராட்சத பாறைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கூறுகையில் ‘கொடைக் கானல்-பெரியகுளம் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள், ராட்சத பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் ஆபத்தான நிலையில் தொங்கும் பாறைகள் நாளை (அதாவது இன்று) வெடி வைத்து அகற்றப்படும்’ என்றார்.

Next Story