ஆன்-லைனில் வீடியோ பார்த்து கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவர் கைது
ஆன்-லைனில் வீடியோ பார்த்து வீட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஓம்கார் போயிர்(வயது23). இவர் ஆன்-லைனில் பிரிண்டர் ஒன்று ஆர்டர் செய்திருந்தார். சம்பவத்தன்று பிரிண்டர் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அப்போது அதற்கான ரூ.10 ஆயிரத்தை நிறுவன ஊழியரிடம் கொடுத்தார். இதனை ஊழியர் வாங்கிக்கொண்டு அலுவலகத்தில் கொடுத்தபோது, அனைத்தும் கள்ளநோட்டுக்கள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆன்-லைன் நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டுக்களை கொடுத்த ஓம்கார் போயிரின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், அவரது வீட்டில் கள்ளநோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வீட்டிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.
விசாரணையில், ஓம்கார் போயிர் ஆன்-லைனில் வீடியோவை பார்த்து ரூ.2 ஆயிரம் நோட்டுக்கான கள்ளநோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. இதுவரை அவர் ரூ.2000, ரூ.100 மற்றும் ரூ.50 ஆகிய கள்ளநோட்டுக்களை அச்சிட்டு காய்கறி மார்க்கெட்டுகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story