சட்டசபை சிவசேனா தலைவராக ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தேர்வு - ஆதித்ய தாக்கரே முன்மொழிந்தார்


சட்டசபை சிவசேனா தலைவராக ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தேர்வு - ஆதித்ய தாக்கரே முன்மொழிந்தார்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:30 PM GMT (Updated: 31 Oct 2019 8:09 PM GMT)

சட்டசபை சிவசேனா தலைவராக ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை ஆதித்ய தாக்கரே முன்மொழிந்தார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே வைத்த கோரிக்கையால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை தலைவராக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பேசுகையில், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமையும் என உறுதி அளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரே தலைமை தாங்கினார். இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதில் சட்டசபை சிவசேனா தலைவராக, தேர்தலில் முதன் முறையாக வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை மீண்டும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை ஆதித்ய தாக்கரே முன்மொழிந்தார். இதனை சுனில் பிரபு வழிமொழிந்தார்.

இதைத்தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே சட்டசபை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுபோல் சிவசேனா சட்டசபை தலைமை கொறடாவாக சுனில் பிரபு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இருவருக்கும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே தானேயை சேர்ந்தவர் ஆவார்.

இந்த கூட்டத்தில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கலந்துகொண்டனர்.

Next Story