குமரியில் கொட்டி தீர்த்தது கனமழை: 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது; பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம்


குமரியில் கொட்டி தீர்த்தது கனமழை: 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது; பொதுமக்கள் முகாம்களில் தஞ்சம்
x
தினத்தந்தி 1 Nov 2019 4:45 AM IST (Updated: 1 Nov 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் 4 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 30 வீடுகள் சேதமடைந்தன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த மண்டலமானது. அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மஹா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று காலையிலும் நாகர்கோவில் நகரில் லேசான மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது.

பலத்த மழையால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள், முக்கிய வீதிகள், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும், கால்வாய்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், நேற்று 3-வது நாளாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு அதிகப்படியான தண்ணீர் வந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 2,634 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 2,534 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 835 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 40 கன அடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 137 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 135 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு 10 கன அடி தண்ணீரும் வந்தது. இதில் சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 805 கன அடி உபரிநீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி உபரிநீரும் திறந்து விடப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு பிறகு பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மாம்பழத்துறையாறு அணை நிரம்பியிருப்பதால் இந்த அணையில் இருந்து 345 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. முக்கடல் அணையில் இருந்து 7¾ கன அடி தண்ணீர் உபரிநீராக சென்றது.

இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்காடு, முன்சிறை, விரிவிளை, பள்ளிக்கல் ஆகிய கிராமங்களை மழை வெள்ளமும், பெருஞ்சாணி அணை தண்ணீரும் சூழ்ந்தன. இதுபற்றிய தகவல் அறிந்த பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, ஆயம் உதவி ஆணையர் சங்கரலிங்கம், தாசில்தார் கோலப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று வெள்ளம் சூழ்ந்த கிராம மக்களையும், அங்குள்ள ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அங்கிருந்து வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்தனர். சிலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

கனமழையால் குமரி மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. குளச்சல் அருகே பாட்டவிளை பகுதியில் நள்ளிரவில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் மரியமதலேனாள் (வயது 75) என்ற மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். இதேபோல் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலும், நாகராஜா கோவில் அருகே உள்ள திலகர் தெரு பகுதியிலும் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. திருவட்டார் பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் குடியிருந்த ஒரு வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீட்டில் குடியிருந்தவர்களை திருவட்டார் தாசில்தார் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். நாகர்கோவில் பறக்கிங்கால் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் குடியிருப்பவர்கள் மழை வெள்ளத்தை வெளியேற்ற மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பு-அருமநல்லூர் சாலையில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையை பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு படையினர் அங்கு சென்று சாலையில் கயிறு கட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், 6 வீடுகள் பகுதியாகவும் என 7 வீடுகளும், தோவாளை தாலுகாவில் 3 வீடுகள் பகுதியாகவும், கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியாகவும் என 4 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 3 வீடுகள் பகுதியாகவும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியாகவும் என 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 8 வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 30 வீடுகள் ஒரே நாள் மழையில் இடிந்து விழுந்ததாக வருவாய்த்துறை அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் தோவாளை தாலுகா பகுதியில் 2 மின்கம்பங்களும், அகஸ்தீஸ்வரம் தாலுகா மதுசூதனபுரம் பகுதியில் ஒரு மின்கம்பமும் சாய்ந்தன.

இதேபோல் மார்த்தாண்டம்- நட்டாலம் சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதன் கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றினர். இதனால் நேற்று காலை 8 மணிக்குப்பிறகே அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் வேம்பனூர் பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. மேலும் சிறு, சிறு மரங்களும் விழுந்தன. அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

குமரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததை தொடர்ந்து நேற்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

ஆசாரிபள்ளம் பகுதியில் நெல்வயல்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் வாழைத்தோட்டங்களில் சூறைக்காற்றின் காரணமாக வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்வயல்கள், வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றில் மழை வெள்ளம் புகுந்துள்ளன. இந்த மழையால் மாவட்டத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான மீன்பிடி தொழில், செங்கல் சூளைத் தொழில், ரப்பர் பால்வடிக்கும் தொழில் போன்றவை முடங்கி உள்ளன.

பலத்த மழையால் மார்த்தாண்டம்-கருங்கல் செல்லும் சாலைகளில் பல இடங்களில் மழைநீரால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தடுப்பணை மீது சுமார் 5 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் செல்கிறது. இதன்காரணமாக குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குழித்துறை அருகே பழவார் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் குடும்பத்துடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து சிமெண்டு கூரை சேதமடைந்தது. சத்தம் கேட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்த பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி சம்பவ இடத்தை பார்வையிட்டு பாறையை உடைத்து அகற்ற உத்தரவிட்டார். மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி குமாரவேல் தலைமையில் மீட்பு குழுவினர் மற்றும் விளவங்கோடு தாசில்தார் புரந்திரதாஸ் முன்னிலையில் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் பாறையை உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தோவாளை தாலுகாவுக்கு உள்பட்ட பகுதிகளான ஈசாந்திமங்கலம், நாவல்காடு, இறச்சகுளம், தெரிசனங்கோப்பு,ஞாலம், அருமநல்லூர், அழகியபாண்டியபுரம், தாழக்குடி ஆகிய பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் நிலையில்இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அவை தண்ணீரில்மூழ்கின.

பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோஸ் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story