‘பிகில்’ திரைப்படம் வெளியிட தாமதம் ஆனதால் வன்முறை: கிருஷ்ணகிரியில், விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது


‘பிகில்’ திரைப்படம் வெளியிட தாமதம் ஆனதால் வன்முறை: கிருஷ்ணகிரியில், விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2019 4:00 AM IST (Updated: 1 Nov 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில், ‘பிகில்‘ திரைப்பட சிறப்பு காட்சி வெளியாக தாமதம் ஆனதால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விஜய் ரசிகர்கள் மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி,

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்‘ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியானது. கிருஷ்ணகிரியில் இந்த திரைப்படம் 3 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தது. படம் வெளியான அன்று நள்ளிரவு 1 மணி அளவில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள ஒரு தியேட்டர் முன்பும், பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தியேட்டர் முன்பும் ரசிகர்கள் திரண்டனர்.

அவர்கள் சிறப்பு காட்சியை ஒளிபரப்பக்கோரி தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தியேட்டர் ஊழியர்கள், சிறப்பு காட்சியை உடனடியாக ஒளிபரப்ப முடியாது என்று கூறினார்கள். இதனால் வன்முறை ஏற்பட்டது. இதில் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் திரண்ட ரசிகர்கள் சிலர் அங்கிருந்த சிக்னலை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

மேலும் போலீசாரின் தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) மற்றும் ஒலி பெருக்கிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதே போல ரவுண்டானா பகுதியில் இருந்த கடைகளின் பேனர்களையும், போர்டுகளையும் உடைத்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி சின்ன தாளப்பள்ளியை சேர்ந்த பிரபு (20), மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் (29), பாஞ்சாலியூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (22), மணி (36) ஆகியோர் உள்பட மொத்தம் 30 விஜய் ரசிகர்களை கடந்த 25-ந் தேதி கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 26-ந் தேதி கட்டிகானப்பள்ளி பசீர்பாய், மேல்சோமார்பேட்டை முகசீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த வன்முறை தொடர்பாக கிருஷ்ணகிரி எம்.ஜி.ஆர். நகர் முத்தமிழ் (20), நவீன்குமார் (19), லண்டன்பேட்டை வெற்றிவேல், பூபதி, பிரகாஷ், ஆனந்த் நகர் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகர், சிவபாரத், வெங்கடேஷ், பிரசாந்த் உள்பட 18 விஜய் ரசிகர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். வன்முறை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

‘பிகில்‘ பட சிறப்பு காட்சி வெளியிட தாமதம் ஆன விவகாரத்தால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ஏற்கனவே 32 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 18 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story