காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் தமிழக அரசு நிதி உதவியுடன் ‘அம்மா’ படப்பிடிப்பு தளம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் தமிழக அரசு நிதி உதவியுடன் ‘அம்மா’ படப்பிடிப்பு தளம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 1 Nov 2019 11:00 PM GMT (Updated: 1 Nov 2019 8:20 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் தமிழக அரசு நிதி உதவியுடன் அமைய உள்ள அம்மா படப்பிடிப்பு தளத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம், பையனூரில் திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழா கடந்த 26.8.2018 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, ஜெயலலிதா பெயரில் அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 16.9.2019 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள அம்மா படப்பிடிப்பு தளத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி உள்ளார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா’ ஆகிய இருபெரும் தலைவர்களுடைய பெயரிலே உங்களுடைய திரைப்படத் துறைக்கு ஒரு அற்புதமான படப்பிடிப்புத் தளத்தை நீங்கள் அமைத்திருக்கின்றீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்று சொன்னால், படப்பிடிப்பிற்கு, வெளியே சென்று படம் பிடிக்கக்கூடிய சூழ்நிலையை மாற்றி, தமிழகத்திலே, அதுவும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அந்தத் தளம் மேலும், மேலும் வளர்ந்து இந்தியாவிலேயே சிறந்த படப்பிடிப்புத் தளமாக அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் பொ.சங்கர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என். சாமிநாதன், துணைத் தலைவர்கள் தீனா மற்றும் ஸ்ரீதர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், லியாகத் அலிகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இந்த தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களை மேற்கொண்டும், சுற்றுச்சூழல் எந்திரங்களை நிறுவியும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிகளை முழுமையாக பின்பற்றியும் நிறுவப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலையில், 2020-21-ம் ஆண்டு முதல் ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதன்மூலம் டான்செம் நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் தற்போது உள்ள 7 லட்சம் டன்னில் இருந்து 17 லட்சம் டன்னாக உயரும். இந்த ஆலை 809 கோடியே 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த தொழிற்சாலையால் 250 பேர் நேரடியாகவும் 1,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மணப்பாறையில் உள்ள மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் அடுக்கு காகித அட்டை ஆலையின் விரிவாக்க திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.1,100 கோடியில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட வன்மரக்கூழ் தயாரிக்கும் பிரிவு, ரசாயன மீட்பு கொதிகலன் பிரிவு மற்றும் 20 மெகாவாட் திறன் கொண்ட மின்னாக்கி நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அப்போது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையான ரூ.18 கோடியே 33 லட்சத்து 36 ஆயிரத்து 750-க்கான வங்கி வரைவோலையை முதல்-அமைச்சரிடம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story