கோத்தகிரி அருகே, 2 குட்டிகளுடன் தனியார் விடுதிக்குள் புகுந்த கரடி - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி


கோத்தகிரி அருகே, 2 குட்டிகளுடன் தனியார் விடுதிக்குள் புகுந்த கரடி - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 2 Nov 2019 4:15 AM IST (Updated: 2 Nov 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே 2 குட்டிகளுடன் தனியார் விடுதிக்குள் கரடி புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே அரவேனுவில் இருந்து அளக்கரைக்கு செல்லும் வழியில் பல்வேறு தனியார் தங்கும் விடுதிகள் அமைந்து உள்ளன. அதில் பெரும்பாலான விடுதிகள் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டி இருக்கின்றன. இதனால் அங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக அரவேனுவில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையிலும், அங்குள்ள தேயிலை தோட்டங்களிலும் 2 குட்டிகளுடன் கரடி அடிக்கடி உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கடந்த வாரம் அரவேனு-அளக்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை குட்டிகளுடன் அந்த கரடி துரத்தியது. அப்போது அவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று தப்பினார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அரவேனு-அளக்கரை சாலையோரத்தில் உள்ள தனியார் விடுதிக்குள் 2 குட்டிகளுடன் கரடி புகுந்தது. இதனால் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது அறைகளுக்கு ஓடிச்சென்று கதவை மூடி கொண்டனர். சிலர் கரடிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் கரடிகள் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 2 குட்டியுடன் சுற்றித்திரியும் கரடியால் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு செல்ல முடிவது இல்லை. சாலையில் அவை நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றனர்.

Next Story