காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு


காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 2 Nov 2019 6:07 AM IST (Updated: 2 Nov 2019 6:07 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய இரு கட்சிகளும் உடனடியாக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், மந்திரி பதவிகளை சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார். அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் பாரதீய ஜனதாவை வலியுறுத்தினார்.

ஆனால் சிவசேனாவுக்கு ஆட்சியில் சமபங்கு வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை என்று பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையும் விவகாரம் ‘கிணற்றில் போட்ட கல்’ போல உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி முடிவதால், அதற்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்தியாக இருப்பேன் என்றும், சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதம் காட்டுவதால், பாரதீய ஜனதா தலைவர்களும் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தாமதம் செய்து வருகின்றனர். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ஏற்கனவே கூறப்பட்டு வந்ததை போல தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை திடீரென சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், சிவசேனா நினைத்தால் நிலையான அரசை அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற முடியும் என்று பாரதீய ஜனதாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் மாற்று ஆட்சி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளிச்சத்தக்கு வந்து உள்ளது. அதாவது சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்தபோது அவரது போன் மூலம் சரத்பவார்- உத்தவ் தாக்கரே ஆகிய இரு தலைவர்களும் உரையாடி உள்ளனர்.

சிவசேனா தனித்து ஆட்சியமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது அல்லது சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க, அதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போன்ற அம்சங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் ஆலோசித்து உள்ளனர்.

இது தொடர்பாக சரத்பவார் உடனடியாக மாநில காங்கிரஸ் தலைவர்களை அழைத்து பேசினார்.

இதற்கிடையே சரத்பவார் வருகிற 4-ந் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து அவர் சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வசம் 54 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசிடம் 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த கட்சிகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மராட்டியத்தில் பாரதீய ஜனதா அல்லாத மாற்று அரசு அமைய வாய்ப்பு உள்ளது.

ஆனால் பாரதீய ஜனதா, சிவசேனா மோதல் முடிவுக்கு வந்து, அந்த கட்சிகள் ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Next Story