உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு - கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்


உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு - கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 Nov 2019 9:59 PM GMT (Updated: 2 Nov 2019 9:59 PM GMT)

உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு நடத்தினார். அப்போது கஞ்சா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் சமீபகாலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். காவல்நிலைய அதிகாரிகளை அழைத்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்துகிறார்.

மேலும் போலீஸ் நிலையங்களுக்கு அவரே நேரடியாக சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகளின் பட்டியலை எடுத்து வரக்கூறி அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? அவர்கள் ஒவ்வொருவர் மீதும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரங்களை கேட்டறிந்தார். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளின் விவரம், அடுத்தகட்டமாக அவர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

பஸ் நிலையத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாரை அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு மாறன் உடனிருந்தார்.

Next Story