மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பி இருந்தன. அந்த அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் 2 அணைகள் நிரம்பின. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை மற்றும் கடையம் அருகே உள்ள ராமநதி அணை ஆகிய 2 அணைகளும் நிரம்பின. இதையடுத்து அணைக்கு வருகிற தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. கடனா அணைக்கு வருகிற வினாடிக்கு 74 கன அடி தண்ணீர், ராமநதி அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
இதுதவிர நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 132.40 அடியை எட்டியது. அணையின் மொத்த நீர்மட்டம் 143 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 1,317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 542 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம், 145.67 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.50 அடியாக உயர்ந்துள்ளது. 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்தது. இந்த 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.
பலத்த மழையால் பாளையங்கோட்டையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. பாளையங்கோட்டை ஜோதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). இவருடைய மனைவி சுகுணா (60). நேற்று காலை இவர்கள் இருவரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இவர்களது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேரும் தப்பினர்.
இதேபோல் வீரமாணிக்கபுரம் புதுகாலனி 2-வது தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சிவகாமி (75). பேச்சிமுத்து இறந்து விட்டதால் சிவகாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்தபோது சிவகாமி வீடும் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் சிவகாமி வெளியே சென்றிருந்ததால் தப்பினார்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா (82). நேற்று காலையில் சுத்தமல்லி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது இவரது வீட்டின் சுவர் லேசாக வெடித்தது. இதைக்கண்ட பொன்னையா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது திடீரென்று வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து வீடு சரிந்தது. இதில் சுவர் அருகில் நின்று கொண்டிருந்த 6 ஆடுகள் இடிபாட்டில் சிக்கி செத்தன.
Related Tags :
Next Story