கிணற்றில் தவறி விழுந்து அண்ணன் இறந்ததால் தங்கையின் திருமணம் நின்றது


கிணற்றில் தவறி விழுந்து அண்ணன் இறந்ததால் தங்கையின் திருமணம் நின்றது
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 2019-11-04T01:55:28+05:30)

மண்ணச்சநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து அண்ணன் இறந்ததால் நேற்று நடக்க இருந்த அவருடைய தங்கையின் திருமணம் நின்றது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டி காட்டுவீதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் தனபால் (வயது 29). பெயிண்டர். இவருடைய தங்கைக்கும், முசிறி அருகே உடையான்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் நேற்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இருவீட்டாரும் கொடுத்திருந்தனர். நேற்று காலை திருமணம் நடைபெற இருந்ததால், நேற்று முன்தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மணப்பெண்ணின் அண்ணனான தனபால் செய்திருந்தார்.

கிணற்றில் தவறி விழுந்து சாவு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள வயல் பகுதிக்கு தனபால் சென்றார். அப்போது, இருள்சூழ்ந்து இருந்ததால், அவர் கால் இடறி, அருகில் இருந்த தண்ணீரில்லாத கிணற்றுக்குள் விழுந்தார். இதற்கிடையே தனபாலை நீண்ட நேரம் காணாத அவருடைய தந்தை, தனது மகனை தேடி வயல்பகுதிக்கு சென்றார்.

அங்கு தனபால் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர், கிணற்றுக்குள் பார்த்த போது, தனபால் கிணற்றுக்குள் தவறி விழுந்து மயங்கி கிடந்தார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனபாலை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

தங்கையின் திருமணம் நின்றது

இதுபற்றி தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் தனபாலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மணப்பெண்ணின் அண்ணன் இறந்ததால், நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story