தமிழகம் வளர்ச்சி அடைய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்


தமிழகம் வளர்ச்சி அடைய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்
x
தினத்தந்தி 4 Nov 2019 4:00 AM IST (Updated: 4 Nov 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் வளர்ச்சி அடைய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பா.ம.க. சார்பில் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படைகளின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பைசுஅள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுச்சாமி, பா.ம.க. மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னதம்பி வரவேற்று பேசினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விளக்கி பேசினார். கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்

தமிழகத்தில் என்மீது அதிக பாசம் கொண்ட தம்பிகள்,தங்கைகள் இருப்பது இந்த தர்மபுரி மாவட்டத்தில் தான். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் 5-முதல் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து உங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்ல வேண்டும். சாதி, மத, கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ஒரே ஒரு முறை அன்புமணிக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்க வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகள் உள்ளன.

தமிழகமும், தர்மபுரி மாவட்டமும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை நீங்கள் பெற வேண்டும். எனது தம்பி, தங்கைகளான நீங்கள் நினைத்தால் இதை செய்ய முடியும். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்த 5 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் 7 நீர்பாசன திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நீங்கள்தான் காரணம்.

ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்

தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு காவிரி ஆற்றின் உபரிநீரை கொண்டுவரும் திட்டம் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சரை சந்தித்தபோது பேசி உள்ளேன். இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி எத்தனைமுறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டபணிகள் விரைவுபடுத்தப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்விக்கடன், நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை, குறிப்பாக பெண் வாக்காளர்களை ஏமாற்றி விட்டார். இனி மக்கள் அவரை நம்பமாட்டார்கள்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பாரிமோகன், பாட்டாளி இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், முருகசாமி, பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, பசுமைதாயகம் மாநில துணை செயலாளர் மாது, முன்னாள் மாவட்ட செயலாளர் இமயவர்மன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சின்னசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சேட்டு, பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராமசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ராஜா, ஒன்றிய தலைவர்கள் சரவணன், நரசிம்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றியதலைவர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story