கோவை அருகே, வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் 6 பேர் கைது
கோவை அருகே வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சுற்றிதிரிந்த 6 பேர் கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
துடியலூர்,
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அருகே ஆனைகட்டி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. ஆனைகட்டி வனப்பகுதியில் நேற்று அதிகாலை கோவை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தனர். வனக்காவலர்களை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் 4 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தூமனூரை சேர்ந்த சடையன்(வயது 53), ஆலமரமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி(75), மருதன்(65), முருகன்(37), கண்டிவளியை சேர்ந்த ரங்கசாமி(57), ஜம்புகண்டியை சேர்ந்த நஞ்சப்பன்(33) என்பதும், இவர்கள் 6 பேரும் மலைவாழ் மக்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிகளுடன் சென்றதும், அந்த சமயத்தில் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 6 பேரையும் தடாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆனைகட்டி மலைப்பகுதி அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து 2 மாநில போலீசாரும் வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 6 பேர் கும்பல் துப்பாக்கிகளுடன் வனப்பகுதியில் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story