புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு


புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

அரசு கட்டிடங்கள் கட்ட புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தக்கோரி கிழுமத்தூர் கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி என்கிற அமைப்பின் துணை தலைவர் நடராஜன் தலைமையில், அந்த அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கலாம் என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை கலைத்து விட்டு, அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களும் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கிற்காக தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்திலும் மேற்கண்டவாறே கூறியுள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் எடுத்துள்ள அரசு முடிவு பக்தர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூல பத்திரத்தை திரும்ப பெறவேண்டும் என்று கூறியிருந்தனர்.

தடை விதிக்க வேண்டும்

இதேபோல் ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மலைப்பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. எங்கள் பகுதியில் செயல்பட்ட கல்குவாரியினால், அதனை சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டும், சுற்றுச்சூழல் மாசுபட்டும், மேலும் நீர் ஆதாரம் குறைந்தும் கல்குவாரிகளில் வெடி வைக்கும் போது வீடுகளின் சுவர்களில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டும் வந்தது. இதனால் மறைந்த ஜெயலலிதா கல்குவாரிகள் செயல்பட தடை விதித்தார். இந்நிலையில் தற்போது கல்குவாரிகள் மீண்டும் செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் நலன் கருதாமல் அந்த கல்குவாரிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் அந்த கல்குவாரிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரணி கிராம மக்கள் கல்குவாரிகளை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்குவாரிகள் செயல்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றுகை

குன்னம் தாலுகா கிழுமத்தூர் கிராம மக்கள் தங்களது பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை அரசு கட்டிடங்களை கட்ட பயன்படுத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், கிழுமத்தூர் கிராமத்தில் மத்திய மாதிரி பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுமார் 5 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இருப்பதாக தாசில்தார் கூறிவருகிறார். கிராமத்தில் வேறு புறம்போக்கு நிலம் இல்லாததால், அந்த நிலத்தில் எங்கள் கிராமத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அஞ்சல் அலுவலகம், சமுதாயக்கூடம், மாணவர்கள் விடுதி கட்டுவதற்கு பயன்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

263 மனுக்கள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 263 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை திட்டங்களின் கீழ் 22 நபர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி, உதவி- கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story