பண்ருட்டியில் பட்டப்பகலில் துணிகரம், தையல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை


பண்ருட்டியில் பட்டப்பகலில் துணிகரம், தையல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Nov 2019 4:15 AM IST (Updated: 5 Nov 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் தையல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 47). இவர் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் தையல் கடை வைத்துள்ளார். இந்த கடையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

சுரே‌ஷின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு தேவையான நகைகளை அவரது குடும்பத்தினர் வாங்கி, வீட்டில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு தேவையான பட்டு சேலைகள் வாங்குவதற்காக சுரே‌‌ஷ் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு காஞ்சீபுரத்திற்கு சென்றார்.

இதை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து, சுரே‌ஷின் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதற்கிடையில் இரவு 7 மணியளவில் சுரே‌‌ஷ், தனது கடையில் வேலைபார்க்கும் வினோத் என்ற ஊழியரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று மின்விளக்கை போட்டு வருமாறு கூறியுள்ளார்.

அதன் பேரில் வினோத், வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் கடையின் உரிமையாளர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தார். நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று அறிந்த அவர், பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவரும் காஞ்சீபுரத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டார்.

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமே‌‌ஷ்குமார், ஜவ்வாது உசேன், மாயகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் சென்றிருந்த சுரே‌‌ஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோ மற்றும் பூஜை அறையில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7½ லட்சமாகும்.

இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு, கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story