விளை பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
விவசாய விளை பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மதுரை,
மத்திய அரசு தடையில்லா வர்த்தகத்தை அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்த போராட்டம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட குழு சார்பாக ஏராளமான விவசாயிகள் நேற்று அண்ணா பஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு சங்க நிர்வாகிகள் எம்.ஜெய்கொடி, சந்தனம், கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தவமணி, வி.ஜெய்கொடி, செல்லவேல், திருப்பதி, மெய்யழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் மத்திய அரசு தடையில்லா வர்த்தகத்தை அமல் படுத்துவதால் வெளிநாட்டில் இருந்து விவசாய விளை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதனால் இந்திய விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே தடையில்லா வர்த்தகத்தை அமல்படுத்தக்கூடாது.
விவசாய விளை பொருட்களையும், பால் பொருட்களையும் எந்த காரணம் கொண்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்றனர்.
Related Tags :
Next Story