அடுத்த ஆண்டு இறுதிக்குள் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் மாநகராட்சி ஆணையாளர் தகவல்


அடுத்த ஆண்டு இறுதிக்குள் சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 5 Nov 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பழைய பஸ் நிலையத்தை ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் பழைய பஸ் நிலையத்தை ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீர்மிகு நகரத் திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ் சேலம் பழைய பஸ் நிலையத்தை ரூ.92.13 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றியமைக்கும் பணிகள் நடக்கிறது. பழைய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் 2 ஆயிரத்து 839 பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பொதுமக்கள் நலன்கருதி போஸ் மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது.

இதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தை ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றியமைக்கும் பணிகளுக்காக, பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பஸ் நிலையம் அருகில் உள்ள 2 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இடிக்கப்பட்டு, முற்றிலுமாக அகற்றப்பட்டு, ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

தரைமட்ட தள பணிகள்

ஈரடுக்கு பஸ் நிலைய தரைமட்ட தளம் அமைக்கும் பணிகள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தேன். ஈரடுக்கு பஸ் நிலையம் தரைமட்ட தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மேற்கூரை தளம் என 5 தளங்களை கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. தரைமட்ட தளத்தில் சுமார் 1,500 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, 54 கடைகள் அமைய உள்ளது.

தரைத்தளத்தில் 29 கடைகள், 26 பஸ் நிறுத்தும் பகுதி, 11 அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் முதல்தளத்தில் 29 கடைகள், 26 பஸ் நிறுத்தும் பகுதி, 11 அரசு அலுவலக கட்டிடங்கள் அமைய உள்ளன. இரண்டாம் தளத்தில் 47 கடைகள், மேற்கூரை தளத்தில் 11 கடைகளும் அமைக்கப்பட உள்ளன.

அடுத்த ஆண்டு இறுதிக்குள்..

பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச வை-பை வசதியும் வழங்கப்பட உள்ளது. பஸ் நிலையம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் சராசரியாக தினசரி 3 ஆயிரம் பஸ்கள் வந்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 2020-ம் ஆண்டு (அடுத்த ஆண்டு) டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக் கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story