அத்திபாடி தொடக்கப்பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது


அத்திபாடி தொடக்கப்பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2019 10:30 PM GMT (Updated: 5 Nov 2019 5:58 PM GMT)

அத்திபாடி தொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

வாணாபுரம், 

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே அத்திபாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 15 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் பணியாற்றி வந்தனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றுள்ளார்.

இதனையடுத்து பள்ளியில் பாடம் நடத்துவதற்காக தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்த மதலைமுத்து (49) என்பவர் தற்காலிகமாக அத்திபாடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்தி வருகிறார். அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்கள் இதுகுறித்து வாணாபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பள்ளிக்கு வாணாபுரம் போலீசார் வந்து மாணவிகளிடையே தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மதலைமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story