துபாயில் இருந்து விமானங்களில் கடத்தி வந்த ரூ.15.88 லட்சம் தங்கம், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த ரூ.15.88 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை சுங்க வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பயணிகளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே அமைந்துள்ளது பஜ்பே சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து துபாய் உள்பட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க விமான நிலையத்தில் சுங்க வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் சுங்க வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காலை மற்றும் மாலையில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு 2 தனியார் விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது காலையில் வந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணி பொம்மைகளில் மறைத்து வைத்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோல் மாலையில் வந்த ஒரு விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணி பொம்மைகளில் மறைத்து வைத்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட 211 சிகரெட் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் இருந்தும் தங்கக் கட்டிகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.15.88 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரையும் சுங்க வரித்துறை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் விமான நிலைய போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story