மானியத்தில் கறவை மாடு வழங்க நிதி ஒதுக்கீடு அமைச்சர் பாஸ்கரன் தகவல்


மானியத்தில் கறவை மாடு வழங்க நிதி ஒதுக்கீடு அமைச்சர் பாஸ்கரன் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 9:33 PM GMT)

மானியத்தில் கறவை மாடு வழங்க நடப்பாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை,

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் சிவகங்கையை அடுத்த, அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் மானிய திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். வங்கியின் பொது மேலாளர் செல்லபாண்டி வரவேற்று பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் மகளிர்குழுக்களுக்கு மானிய திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கி பேசியதாவது:- ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். மேலும் பெண்கள் சுயமாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விலையில்லாத ஆடு, மாடுகளை வழங்கினார்.

அவரின் இந்த திட்டங்களையும், பெண்களுக்கான தொழிற் பயிற்சி மற்றும் வங்கிகள் மூலம் சுழல்நிதி கடன் என பல்வேறு திட்டங்களையும் தற்போதைய அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

ரூ.10 கோடி ஒதுக்கீடு

அதன் தொடர்ச்சியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மானிய திட்டத்தில் கறவை மாடு வழங்க நடப்பாண்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ.4 கோடி மதிப்பிலான கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலம் சுயஉதவி குழுக்களுக்கு இந்த திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, பலராமன், முன்னாள் யூனியன் தலைவர் மானாகுடி சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story