மீன்சுருட்டி அருகே துணிகரம்: கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காட்டகரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக இதே கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் உள்ளார். இவர், சாதாரண நாட்களில் மாலை 6 மணியளவில் அம்மனுக்கு விளக்கு போட்டு விட்டு கோவிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை கோவில் திறந்து இருக்கும். அதன்பிறகு பூட்டப்பட்டு இருக்கும்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் பூசாரி சந்திரசேகர் இரவு 8 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம்போல நேற்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி, கோலிலின் முன்புறம் உள்ள கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டும், கோவிலில் உள்ள உண்டியலை காணாதது கண்டும் திடுக்கிட்டார். இதனையறிந்து அருகில் இருந்தவர்கள் கோவிலுக்கு வந்தனர்.
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பின்னர் அனைவரும் கோவில் உண்டியலை தேடினர். அப்போது கோவிலின் அருகில் இருந்த புளியந்தோப்பில் உடைக்கப்பட்ட நிலையில் கோவில் உண்டியல் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் கண்காணிப்பு கேமரா வைக்க போலீசார் அறிவுறுத்தினர். உடைக்கப்பட்ட உண்டியலில் ரூ.2 ஆயிரம் வரை இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 500 ரூபாய் நோட்டு ஒன்றில் மஞ்சள் தடவி இருந்ததால் அந்த நோட்டை மட்டும் மர்ம நபர்கள் எடுத்து செல்லவில்லை. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் இதே கோவிலில் திருட்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story