உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பு அளிப்பார்கள் கி.வீரமணி பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பு அளிப்பார்கள் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 6 Nov 2019 11:00 PM GMT (Updated: 6 Nov 2019 7:35 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் தெளிவான தீர்ப்பு அளிப்பார்கள் என்று கி.வீரமணி கூறினார்.

திருச்சி,

திருச்சி சுந்தர் நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று நிறுவனர் நாள் விழா நடந்தது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கியும், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் பேசினார். அவர் பேசுகையில் ‘தந்தை பெரியார் 95 ஆண்டுகள் சமூக நீதிக்காக போராடினார். அவரது சமூக பணியை கண்டு அமெரிக்காவே வியந்தது. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்த முன்னாள் மாணவர்களில் பலர் இன்று அமெரிக்காவில் முன்னணி கணினி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இதைப்பார்க்கும் போது கல்வி உரிமை உலகம் முழுவதும் பரவி உள்ளது’ என்றார். இந்த விழாவில் தனியார் நிறுவன மேலாளர் மதுமிதா கோமதிநாயகம், இந்திய நிதி அமைச்சகத்தின் முன்னாள் இணை செயலாளர் சேகர், வீ. அன்பு ராஜ், கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களுக்கு கடைசியாக ஒரு நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை அ.தி.மு.க.விற்கு இடைத்தேர்தல் முடிவு தந்திருக்கலாம். அப்படியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தும் துணிச்சல் வந்தால் நல்லது. உள்ளாட்சி என்பது உள்ளபடியே நல்லாட்சியாகவே அமைய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பை தெளிவாக அளிப்பார்கள். அந்த நம்பிக்கை இருக்கின்றது. 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறுவது போன்று உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story