கள்ளக்காதல் விவகாரத்தில் பந்தல் அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு லாரி டிரைவர் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் பந்தல் அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 4:30 AM IST (Updated: 7 Nov 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பந்தல் அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள எர்ரப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பந்தல் அமைப்பாளர். இவருடைய மனைவி கவிதா(26). பாளையம்புதூர் அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(27). லாரி டிரைவர். மணிகண்டனுக்கும், சதீஸ்குமாருக்கும் நிலம் வாங்கி விற்பனை செய்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சதீஸ்குமார் அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது கவிதாவுக்கும், சதீஸ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த மணிகண்டன் தனது மனைவி மற்றும் சதீஸ்குமாரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் கடந்த மாதம் 3-ந்தேதி சதீஸ்குமாரை கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்தநிலையில் நேற்று அதிகாலை மணிகண்டன் வீட்டுக்கு சென்ற சதீஸ்குமார் பெட்ரோல் குண்டை அவருடைய வீட்டின் மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் கதவு மற்றும் உள்ளே இருந்த பாத்திரங்கள், துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது.

இதுகுறித்து மணிகண்டன் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவுடான கள்ளக்காதல் விவகாரம் மற்றும் மணிகண்டனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது சதீஸ்குமார், பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story