ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் கைது
x
தினத்தந்தி 7 Nov 2019 12:24 AM GMT (Updated: 7 Nov 2019 12:24 AM GMT)

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸ்காரர் களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத், 

தானே மாவட்டம் கல்யாண் தாலுகாவை சேர்ந்த ஒருவர் மீது குட்கா கடத்தல் வழக்கு வால்துனி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அந்த போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் காம்ளே, அந்த நபரை சந்தித்து குட்கா கடத்தல் வழக்கு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தந்தால் விட்டு விடுவதாக தெரிவித்தார்.

இதனால் அந்த நபர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் நடத்திய பேரத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து முன்பணமாக ரூ.1 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறினார்.

இந்தநிலையில் அந்த போலீஸ் நிலைய போலீஸ் காரர்கள் பாரத் காடே(49), அங்குஷ் நர்வானே(49) ஆகியோர் அந்த நபரை அடிக்கடி சந்தித்து மீதி பணம் ரூ.50 ஆயிரத்தை உடனடியாக தரும்படி வலியுறுத்தி வந்தனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் சம்பவம் குறித்து தானே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் லஞ்சஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதற்காக அந்த நபரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அந்த நபர் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு சென்று லஞ்சப்பணம் ரூ.50 ஆயிரத்தை அங்கிருந்த போலீஸ்காரர்கள் பாரத் காடேமற்றும் அங்குஷ் நர்வானேவிடம் கொடுத்தார்.

பணத்தை அவர்கள் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஷ் காம்ளேவையும் கைது செய்தனர்.

இது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story