திருவண்ணாமலை அய்யங்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை அய்யங்குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது. இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
இதன் முக்கிய நிகழ்வான மகா தீபம் 10-ந் தேதி ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை சாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
மேலும் கோவிலில் சாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. தீபத்திருவிழா நெருங்குவதால் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மகா தீபம் ஏற்றப்பட்ட மறுநாளில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். இந்த தெப்பல் உற்சவத்தை காண உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள். அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சாமி வைக்கப்பட்டு குளத்தில் 3 முறை வலம் வருவார்கள்.
இந்த நிலையில் அய்யங்குளத்தை சுற்றி செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் தெப்பல் இழுக்க சிரமம் ஏற்படும் என்று பக்தர்கள் எண்ணுகின்றனர். மேலும் அய்யங்குளத்தில் சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர். தீபத் திருவிழாவை கருத்தில் கொண்டு அய்யங்குளத்தினை சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story