ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை: வேலூர் சரக டி.ஐ.ஜி. விசாரணை
கண்ணமங்கலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை கொலை வழக்கில் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே முனியந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் லூர்துமேரி, ஓய்வு பெற்ற ஆசிரியை. இவரை கடந்த 5-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். நேற்று முன்தினம் காலை சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக லூர்துமேரியின் சகோதரர் வேலூரை சேர்ந்த மரியசெல்வம் என்பவர் சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை நடந்த வீட்டை நேற்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது கொலைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரவேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கூறுகையில், லூர்துமேரியின் கொலைக்கான காரணம் சொத்துக்காகவா? பணத்துக்காகவா? நிலத்தகராறு முன்விரோதம் காரணமா? உள்பட பல்வேறு வகையில் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் யார்? என்பதை கண்டறிந்து விரைவில் கைது செய்வோம் என்றார்.
Related Tags :
Next Story