காங்கேயம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஊழியர் - தர்மஅடி கொடுத்த உறவினர்கள்


காங்கேயம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஊழியர் - தர்மஅடி கொடுத்த உறவினர்கள்
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 9:37 PM GMT)

காங்கேயம் அரசு மருத்துவமனையில் ரத்தப்பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஊழியருக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம், 

காங்கேயத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 30 வயதுள்ள பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு டாக்டரிடம் பரிசோதனை செய்து கொண்ட அவரை, ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு வருமாறு டாக்டர் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ரத்தப்பரிசோதனை கூடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு ரத்தப்பரிசோதனை செய்து கொண்ட பின்னர் அதனுடைய முடிவு எப்போது கிடைக்கும் என்று அந்த பெண், ரத்தப்பரிசோதகரிடம் கேட்டுள்ளார். அதற்கு ரத்தப் பரிசோதகர் 11 மணிக்கு பிறகு வருமாறு கூறியுள்ளார். இதை தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு அந்த பெண் சென்றுள்ளார்.

அப்போது ரத்தப்பரிசோதகர், அந்த பெண்ணிடம் உடம்புக்கு என்ன செய்கிறது என்று விசாரித்து கொண்டே அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டிற்கு சென்று மருத்துவமனையில் நடந்ததை கண்ணீருடன் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று, ரத்தப்பரிசோதகர் குறித்து தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும், ரத்தப்பரிசோதகரிடம் சென்று ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் களுக்கும், ரத்தப்பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ரத்தப்பரிசோதகருக்கு தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்த சிலரும் ரத்தப்பரிசோதனை கூடத்திற்கு வரும் பெண்கள் பலரிடம் ரத்தப்பரிசோத கர் தவறாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினர். இவர் ஏற்கனவே தாராபுரம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போது இப்படி நடந்து கொண்டதால்தான் காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு வந்தும் அவர் திருந்த வில்லை என பொதுமக்கள் கூறினர். இப்படிப்பட்ட ஊழியரை அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் காங்கேயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story