தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படுவது எப்போது? பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை


தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படுவது எப்போது? பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 10:16 PM GMT)

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டுமானப்பணிகளை தென்மாவட்ட எம்.பி.க்கள் விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர், 

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என அறிவித்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழகத்திலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்பட வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி தமிழகத்திலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடக்கத்தில் செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தோப்பூர், பெருந்துறை ஆகிய இடங்கள் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளாலும், மாநில சுகாதாரத்துறை அலுவலர்களாலும் பார்வையிடப்பட்டது. இறுதியில் மதுரை தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்க ஏற்ற இடம் என மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்து அப்போது மத்திய சுகாதாரத் துறை மந்திரியாக இருந்த ஜே.பி.நட்டா அறிவித்தார்.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்குவதற்கு 250 ஏக்கர் இடம் தேவை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தோப்பூர் பகுதியில் 250 ஏக்கரும் தமிழக அரசுக்கு சொந்தமாக நிலம் இருந்ததால் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. இறுதியாக மேலும் 20 ஏக்கர் நிலம் தேவை என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த 20 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை கட்டுமானப்பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. கடந்த வருடம் ஜனவரி 27-ந் தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஆனாலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான தொடக்க கட்டுமானப்பணிகள் கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அறிவிக்கப்பட்டபோது 3 ஆண்டுகளில் இந்த ஆஸ்பத்திரி பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல்லே கடந்த ஜனவரி மாதம் தான் நாட்டப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி திட்டப்பணிக்கு ரூ.1,274 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் ஜப்பான் நிறுவனத்தால் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை. அறிவிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் தான் கட்டுமானப்பணிகள் தொடங்காமல் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான இடத்தை தேர்வு செய்வதிலேயே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு இறுதியில் தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. தோப்பூர் இதற்கு தகுதியான இடம் என்று மத்திய சுகாதாரத்துறை தான் முடிவு செய்தது. இந்நிலையில் தமிழக அரசும் இதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கட்டுமானப்பணியை தொடங்க மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றால் தற்போது கட்டுமானப்பணியை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும். எனவே தென்மாவட்ட எம்.பி.க்கள் தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணியை விரைவுபடுத்த மத்திய சுகாதாரத்துரை அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தமிழக அரசும் இது பற்றி மத்திய அரசிடம் பேசி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story