தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை


தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2019 4:15 AM IST (Updated: 8 Nov 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பவானியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பவானி,

பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிலங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரக்கோரி சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் பவானி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோவை மண்டல பதிவேடுகள் மற்றும் நில அளவைத்துறை இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோபி கோட்ட நில அளவை ஆய்வாளர் முருகேசன், பவானி தாசில்தார் பெரியசாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள், சிவனடியார் திருக்கூட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒத்திவைப்பு

கூட்டத்தில் சங்கமேஸ்வரர் கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் பாதியில் ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கோவில் நிலங்கள் 4¾ லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக அரசு மானியக்கோரிக்கையின் போது தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான நிலவரப்படி 15 லட்சம் ஏக்கர்கள் இருக்கக்கூடும். ஏராளமான நிலங்கள் பட்டா செய்யப்படாமல் இருக்கிறது.

நடவடிக்கை

தர்மமாக கோவிலுக்கு கொடுத்த நிலங்கள் தனிநபர்களின் பெயரில் உள்ளது. இதனை கண்டறிந்து அடுத்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். கோவில் பெயரில் மாற்றம் செய்தால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும். தமிழக கோவில்களின் வருவாய்களை முறைப்படுத்தினால் அரசுக்கு டாஸ்மாக் மதுபானத்தினால் வரக்கூடிய வருவாய் தேவையில்லை. அதை விட மிகுதியான வருமானம் தரக்கூடிய துறை இந்து சமய அறநிலையத்துறை.

தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களுக்கான பட்டியலை முழுமையாக வெளிக் கொணரவும், ஆக்கிரமிக்கப்பட்ட 10 லட்சம் ஏக்கர் நிலங்களை கோவில் பெயரில் கொண்டு வரவும், சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பவானியில் முன்னோடித் திட்டமாக, பவானியை புனரமைத்து, ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சி மையமாக கொண்டு வர மத்திய அரசிடம் முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story