மணமேல்குடியில், வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - முகமூடி ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
மணமேல்குடியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலை உச்சயினி மாகாளியம்மன் கோவில் தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி கிளையின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்துவதற்கும், பணம் எடுப்பதற்கும் தனி தனியாக எந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலையில் மணமேல்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது.
மழையின் காரணமாக மணமேல்குடி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனை பயன்படுத்திய 2 மர்ம ஆசாமிகள் முகமூடி, கையுறை போன்றவற்றை அணிந்து கொண்டு ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை பயன்படுத்தி பணம் செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது வங்கியின் அலாரம் ஒலித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் ஜீவபாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்கி மேலாளர் ஜீவபாரதி வங்கி ஏ.டி.எம். மையத்தில்
நடந்த கொள்ளை முயற்சி குறித்து மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி சென்று நின்றுவிட்டது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த 4 ஆண்டுகளாக இரவு காவலாளி இருந்து வந்தார். இந்நிலையில் அந்த வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு என்று தனியாக கட்டுப்பாட்டு அறை மும்பையில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதால், இரவு காவலாளி நீக்கப்பட்டார். இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story