புதியம்புத்தூர் அருகே பயங்கரம்: கள்ளக்காதலன் தலை துண்டித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது


புதியம்புத்தூர் அருகே பயங்கரம்: கள்ளக்காதலன் தலை துண்டித்து கொலை - பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 9:20 PM GMT)

புதியம்புத்தூர் அருகே கள்ளக்காதலனை தலையை துண்டித்துக் கொலை செய்ததாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம், 

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சில கார் திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை மாவட்டம் நொச்சிக்குளத்தை சேர்ந்த நடராஜன் மகன் விக்கிரமாதித்த ராஜா என்ற ராஜபாண்டி (வயது 45) என்பவர் கார் திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் அவருடைய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 20 நாட்களாக அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதில் நெல்லை மாவட்டம் வன்னிக்கோனந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ரா, புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்த ராமர் ஆகியோர் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சித்ரா, ராமர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சித்ரா உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து புதியம்புத்தூர் பகுதியில் ராஜபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சித்ரா, ராமர் ஆகியோரை புதியம்புத்தூர் போலீசாரிடம் நெல்லை போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து புதியம்புத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தனது கணவர் ரவிச்சந்திரனுடன் தர்மபுரி மாவட்டம் பாப்பாபெட்டி மண்ணேரி பகுதியில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் மூணாறில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு, சித்தப்பாவின் நண்பரான ராஜபாண்டி அடிக்கடி வந்து சென்றார். அப்போது, சித்ராவுக்கும், ராஜபாண்டிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து ராஜபாண்டி, சித்ராவுக்கு தூத்துக்குடி அருகே புதியம்புத்தூரில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்தார். அங்கு, தனது கார் டிரைவரான நடுவக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூனன் மகன் ராமர் மூலம், போர்ட்சிட்டி நகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு தங்க வைத்தார்.

அதன்பிறகு அவர் அடிக்கடி அங்கு சென்று வந்தார். இந்த நிலையில் கார் டிரைவர் ராமருக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜபாண்டி, சித்ராவை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அறிந்த ராமர், கடந்த மாதம் 16-ந் தேதி தனது மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் நடுவக்குறிச்சியை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல், காட்டு ராஜா மகன் முத்துக்கனி ஆகியோருடன் சித்ரா வீட்டுக்கு வந்தார். அங்கிருந்த ராஜபாண்டியை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர், சக்திவேல், முத்துக்கனி, சித்ரா, லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்தனர்.

பின்னர் கொலையை மறைப்பதற்காக தலையை ஒரு சாக்குப்பையில் வைத்து புதியம்புத்தூரில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் வீசினர். உடலை துணியால் சுற்றி காரில் எடுத்து சென்று தட்டப்பாறை அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வீசி உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதே நேரத்தில் சித்ரா தான் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு, புதிதாக கனிநகரில் ராமர் வாடகைக்கு எடுத்து கொடுத்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து சித்ரா, ராமர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர்களை அழைத்து சென்று ராஜபாண்டியின் தலை, உடல் வீசப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) கிணற்றில் வீசப்பட்ட தலை, கல்குவாரியில் வீசப்பட்ட உடல் ஆகியவற்றை போலீசார் மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல், முத்துக்கனி, லட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்காதலனை கொலை செய்ததாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story