அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 10:00 PM GMT (Updated: 9 Nov 2019 5:08 PM GMT)

அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர், 

அயோத்தி வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதையொட்டி சட்ட ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தமிழகத்திலும் போலீசார் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டு அவர்கள் உஷார் நிலையில் இருந்தனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இந்து, முஸ்லிம் அமைப்பு பிரமுகர்களை அழைத்து முன் எச்சரிக்கையாக அமைதி கூட்டம் நடத்தினர். அதில் போலீசார், பல்வேறு அறிவுரைகள் மற்றும் வேண்டுகோளை மத அமைப்பு நிர்வாகிகளுக்கு விடுத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், காந்திரோடு, ஆற்காடு சாலை, அண்ணாசாலை, கிரீன்சர்க்கிள் போன்ற இடங்களில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் கொணவட்டம், சைதாப்பேட்டை போன்ற நகரின் பல்வேறு இடங்களில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் மத வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவிலிலும் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தலைமை தபால் நிலையம் அருகே வன்முறையில் ஈடுபடுபவர்களை கலைக்க பயன்படுத்தப்படும் வஜ்ரா வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக டி.ஐ.ஜி.நரேந்திரன்நாயர் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சேஷய்யா, விஜயகுமார், அதிவீரபாண்டியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய போலீசார் குழுவினர் வேலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் பதற்றமான இடங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

மேலும் காட்பாடி, ஜோலார்பேட்டை உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அதன் பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ரெயிலிலும் ஏறி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மோப்பநாய் மூலம் வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்று வந்த 2-ம் நிலை காவலர்கள் தேர்வு செய்யும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால், இதை அறியாமல் வந்த ஒரு சில இளைஞர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றனர்.

Next Story