சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 9 Nov 2019 11:00 PM GMT (Updated: 9 Nov 2019 6:56 PM GMT)

சேலத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சேலம்,

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாமல் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. சேலம் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், சிவதாபுரம், பழைய சூரமங்கலம், கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள், பள்ளப்பட்டி, அழகாபுரம் என பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலம் ரெயில் நகரில் உள்ள ஏரி நிரம்பியதால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி பழைய சூரமங்கலம், பெரியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் பெரிதும் அவதியுற்றனர். மேலும் அவர்கள் வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மழைநீர் வீட்டுக்குள் புகுந்த ஆத்திரத்தில் பொதுமக்கள் சேலம் புதுரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பெரியார் நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொருட்கள் சேதம்

கிச்சிப்பாளையம், கருவாட்டு பாலம், பச்சப்பட்டி, நாராயண நகர், களரம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் உள்ள பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். பச்சப்பட்டி பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டுக்குள் சிக்கியவர்களை அந்த பகுதி வாலிபர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் மீட்டு வந்தனர்.

சேலம் நகரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் நனைந்து சேதம் அடைந்தன.

வீடுகள் இடிந்தன

கனமழையினால் சேலம் மணக்காடு பகுதியில் செல்வி, ராஜீவ், லட்சுமி ஆகியோரின் கூரை வீடுகள் உள்பட 5 பேரின் வீடுகள் இடிந்தன. வீட்டிற்குள் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடுகள் இடிந்து விழுந்ததால் டி.வி., மிக்சி உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது.

மேலும் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Next Story