வேப்பந்தட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்


வேப்பந்தட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2019 10:45 PM GMT (Updated: 9 Nov 2019 7:34 PM GMT)

வேப்பந்தட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறியுள்ளார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தொண்டமாந்துறை, பசும்பலூர், கை.களத்தூர், பாதாங்கி உள்ளிட்ட சில ஊர்களில் பொதுமக்கள் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கை.களத்தூர், கிருஷ்ணாபுரம், பசும்பலூர், அரும்பாவூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அதிகாரி மீனாட்சி சுந்தரி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதர், சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், ஜெகதீசன் மற்றும் மருத்துவ குழுவினர்கள் தொண்டமாந்துறை, பாதாங்கி, கை.களத்தூர், பசும்பலூர் உள்ளிட்ட ஊர்களில் முகாமிட்டு குளோரின் பவுடர் தெளித்தும், கொசு மருந்து அடித்தும் மற்றும் தேங்கியுள்ள நீர்களை அகற்றியும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ள மக்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பொய்யான தகவல்களை...

இதனை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் ஒரு சில கிராமங்களில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை சிலர் தவறாக டெங்கு காய்ச்சலால் பலர் இறந்துள்ளதாக கூறி, பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அந்த தவறான தகவலை நம்ப வேண்டாம். வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. சாதாரண காய்ச்சல் மட்டுமே உள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்தந்த ஊர்களிலும் முகாமிட்டு சுகாதார ஏற்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் செய்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.

Next Story