திண்டிவனத்தில் தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை


திண்டிவனத்தில் தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2019 4:15 AM IST (Updated: 10 Nov 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை செய்யாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் ரோஷணை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் சரண்ராஜ்(வயது 27). எலக்ட்ரீசியன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ(25) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சரண்ராஜ், சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் சாப்பிட்டு விட்டு மனைவியுடன் தூங்கினார். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த சரண்ராஜ், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் கண்விழித்து பார்த்த சுபஸ்ரீ, அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பிணமாக தொங்கிய கணவரின் உடலை பார்த்து, அவர் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரோஷணை போலீசார் விரைந்து சென்று, சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுபஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி வரை சரண்ராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தகுமாரியிடம் கேட்டனர். அதற்கு அவர், போதிய ஆட்கள் இல்லாததால் இங்கு பிரேத பரிசோதனை செய்ய முடியாது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடலை எடுத்துச்செல்லுங்கள் என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜின் உறவினர்கள், இது பற்றி காலையிலேயே கூறி இருந்தால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடலை எடுத்து சென்றிருப்போம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், திண்டிவனம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story