காங்கிரஸ் கட்சி எங்களுக்கு எதிரி அல்ல - சஞ்சய் ராவத் பேட்டி
காங்கிரஸ் கட்சி எங்களுக்கு எதிரி அல்ல என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. தேர்தல் முடிவு வெளியாகி நேற்றுடன் 18 நாட்கள் ஆகியும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.105 இடங்களில் வெற்று தனிப்பெரும் கட்சி கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க முடியுமா? என அந்த கட்சிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பினார்.
ஆனால் பாரதீய ஜனதா சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க இயலாவிட்டால் சிவசேனா தனது முடிவை தெரிவிக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறினார். இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவை அழைக்கும் கவர்னரின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு போதுமான பலம் இருப்பதாக கருதவில்லை. எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் சிவசேனா தனது நிலைபாட்டை தெரிவிக்கும் என்றார்.
ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா ஏதாவது ஒப்பந்தம் செய்து உள்ளதா என கேட்டதற்கு, ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு நாங்கள் வியாபாரிகள் அல்ல. அரசியல் என்பது சிவசோனவுக்கு வியாபாரமும் அல்ல. லாபம் மற்றும் இழப்பு என்ற வார்த்தைகள் எங்கள் அகராதியில் இல்லை என்று பதில் அளித்தார்.
குதிரைபேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிக்குவார்களா என்ற கேள்வியை நிராகரித்த சஞ்சய் ராவத், எந்த எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவுவார்கள் என நான் எண்ணவில்லை. இந்த முறை அந்த எண்ணம் நிறைவேறாது. ஆட்சி அமைப்பதற்காக எந்தவொரு அரசியல்வாதையையும் வாங்கி விடலாம் என்ற ஆணவம் இனி இந்த மாநிலத்தில் எடுபடாது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக வேண்டும் என அவரது வீட்டு அருகில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பற்றி கேட்கிறீர்கள்.
உத்தவ் தாக்கரே தற்போது சிவசேனாவின் தலைவர். அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். அவர் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் அடுத்த முதல் மந்திரி என ஏற்கனவே சொல்லி விட்டார் என்றார்.
சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி தலைமையிலான கட்சி மராட்டியத்திற்கு எதிரி அல்ல. மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் ஏதேனும் முடிவு எடுத்து இருந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story