தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது
தாம்பரத்தில், அதிவேகமாக வந்த கார் மோதி போலீஸ் ஏட்டு பலியானார். இது தொடர்பாக காரை ஓட்டிவந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, நியூகாலனி, 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர், சேலையூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வந்தார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், காயத்ரி(21), மோனிஷா(20) மற்றும் கீர்த்தனா(18) என 3 மகள்களும் உள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு ஏட்டு ரமேஷ், பணி முடிந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்காக தாம்பரம் கடப்பேரி பகுதியில் போக்குவரத்து பணிமனை அருகே சென்றார்.
அப்போது மயிலாப்பூரில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, போலீஸ் ஏட்டு ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஏட்டு ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆதித்யா (21) என்ற கல்லூரி மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் ஏட்டு உயிரை பறித்த கார், பல்லாவரத்தில் இருந்தே கார் பந்தயத்தில் வருவதுபோல் மற்றொரு காரை முந்திச்செல்ல முயற்சித்து அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விபத்தில் போலீஸ் ஏட்டே பலியான நிலையில், கார் பந்தயத்தில் ஈடுபட்டபோது இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கவில்லை எனவும், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவருக்கு ஆதரவாகவே விபத்து பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டதாகவும் சக போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story