ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூர கொலை: நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொன்றோம் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்
கண்ணமங்கலம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் நகை – பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகே உள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துமேரி, ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 5–ந் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டின் முன்பு அவரது நாயும் கொலை செய்யப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சாலமன்ராஜா, ஜெயபிரகாஷ், விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதில் லூர்துமேரிக்கு சொந்தமான கடையில் சிக்கன் கடை வைத்திருந்த கருங்காலி குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த இலியாஸிடம் (வயது 30) தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதில் இலியாஸ், அவரது அண்ணன் வாலாஜா கல்மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த மூசா (40), பாத்திர வியாபாரி யூசுப் (36), ராணிப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் (35) ஆகியோர் சேர்ந்து லூர்துமேரியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, லூர்துமேரி தினமும் விதவிதமான நகைகள் அணிந்து வருவதை கண்டு ஆசைப்பட்டு அவரிடம் நிறைய பணம், நகைகள் இருக்கும் என நினைத்து, கொள்ளையடிக்க திட்டமிட்டு கொலை செய்து உள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 5–ந் தேதி இரவு இலியாஸ், லூர்துமேரியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது லூர்துமேரி ஏன் இந்த நேரத்தில் வந்துள்ளாய் என கேட்டுள்ளார். அதற்கு இலியாஸ் நீங்கள் வளர்க்கும் நாய்க்கு சிக்கன் கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.
அப்போது பின்புறமாக தலையில் இரும்பு ராடு மூலம் மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே லூர்துமேரி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர்கள், லூர்துமேரியை தூக்கிச் சென்று அறையில் அமர்ந்தபடி வைத்துவிட்டு, கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு அதில் ஒரு சேலையை கட்டியுள்ளனர். வீட்டிற்கு வெளியே சேலையின் ஒரு பகுதியை கொண்டு வந்து அதில் தீ வைத்துவிட்டு வந்துள்ளனர். ஆனால் பாதியிலேயே தீ அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை என்பது தெரியவந்தது.
மேற்கண்ட தகவலை அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் லூர்துமேரியிடம் இருந்து கொள்ளையடித்த கவரிங் நகைகள், தங்க கம்மல் ஒரு ஜோடி, டி.வி.டி. பிளேயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் ஆரணி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story