தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை


தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சிலைகள் உடைப்பு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Nov 2019 11:00 PM GMT (Updated: 11 Nov 2019 4:28 PM GMT)

தெங்கம்புதூர் அருகே அம்மன் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

தெங்கம்புதூர் அருகே கீழக்காட்டுவிளையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழா தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.

சிலைகள் உடைப்பு

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் வெளிப்பகுதியில் இருந்த 6 அடி உயரமுள்ள சுடலை மாடசாமி சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அரிவாள், சூலாயுதம், ஈட்டி போன்றவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. கோவிலின் பின் பகுதியில் இருந்த நாகர் சிலை உடைக்கப்பட்டு பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன. அத்துடன், கோவில் மூலஸ்தான கதவும் உடைக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர் சாமி சிலைகளை உடைத்து, பூஜை பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வாலிபர் சிக்கினார்

இந்தநிலையில், கோவிலில் இருந்து சிறிது தூரத்தில் உடையப்பன் குடியிருப்பு சாலையில் ஒரு வாலிபர் சுற்றி திரிவதாகவும், அவர் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களை துரத்தி அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசிக்கொண்டிருந்தார். அந்த வாலிபர்தான் சிலை உடைத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அவரை வலு கட்டாயமாக ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story