குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Nov 2019 10:00 PM GMT (Updated: 11 Nov 2019 11:51 PM GMT)

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணி முதலே கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 40 பேர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி அருகே உள்ள அமலிநகர் கிராமத்தில் வசிக்கிறோம். கடந்த ஓராண்டாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் ஊரின் நுழைவு பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து இணைப்பு குழாய் மூலம் எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்கலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்துவிட்டோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுதவிர எங்கள் ஊரில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது சுரங்கப்பாதையை கடக்க முடியாமல் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சினை குறித்தும் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தான் குடிநீர் கேட்டு தற்போது கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.அதன் பின்னர் கிராம மக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அமலிநகரை சேர்ந்த சிலர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக் டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

Next Story