வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், மகன் கைது


வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், மகன் கைது
x
தினத்தந்தி 13 Nov 2019 4:30 AM IST (Updated: 13 Nov 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

வளசரவாக்கம் பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் காரணமாக வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது, கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் வாலிபரும், அவருடன் பெண் ஒருவரும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிவிட்டு ஒன்றாக செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும் அதில் அவர்கள் அங்குள்ள அலுவலகம் ஒன்றில் உள்ளே சென்று வெளியே வருவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக அங்குள்ள வீடுகளில் விசாரித்தபோது, இருவரும் வேலை கேட்டு வந்து, செல்போன் எண்கள் கொடுத்து விட்டுச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

தாய்-மகன் கைது

இதையடுத்து அந்த செல்போன் எண்களை வைத்து விசாரணை செய்ததில், அவர்கள் 2 பேரும் காரைக்குடி, கலவை பொட்டல் பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது 44), அவரது மகன் நாகராஜ் (20), என்பது தெரியவந்தது.

இருவரையும் தேடி கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாய், மகன் இருவரும் வளசரவாக்கம் பகுதியில் தங்கி அங்குள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வந்ததும், பின்னர், வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இருவரும் காரைக்குடி பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story