நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 15 Nov 2019 10:45 PM GMT (Updated: 15 Nov 2019 5:28 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் 59 அடியாக குறைந்தது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நீர்வரத்து காரணமாக அணை நீர்மட்டம் கடந்த மாதம் 65 அடியை எட்டியது. வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதியில் உள்ள இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது ராமநாதபுரம், சிவகங்கை கண்மாய் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால், வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. வைகை அணையில் இருந்து இன்னும் 10 நாட்களுக்கு மேல் ராமநாதபுரம், சிவகங்கை கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உள்ளது.

வடகிழக்குப் பருவமழை தேனி மாவட்டத்தில் பெய்யாததால், வைகை அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே வைகை அணைக்கு பிரதான நீர்ஆதாரமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்து வரும் 10 நாட்களில் வைகை அணை நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 59.19 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,210 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 2,768 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 3,454 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Next Story