சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,349 டன் உரம் தஞ்சை வந்தது - 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது


சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,349 டன் உரம் தஞ்சை வந்தது - 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 2,349 டன் உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 4 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர், 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் சம்பாவும், 30 ஆயிரம் எக்டேரில் தாளடியும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை மிஞ்சும் வகையில் விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான யூரியா உரம் இருப்பில் இல்லை எனவும், தட்டுப்பாடு இன்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

யூரியா உர தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்யப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து சரக்கு ரெயிலின் 31 வேகன்களில் 2,086 டன் யூரியா உரம், 263 டன் கம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 2,349 டன் உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story