சொத்து தகராறில் பயங்கரம்: சுத்தியலால் அடித்து ஆட்டோ டிரைவர் கொலை - தம்பி கைது
ஆண்டிப்பட்டி அருகே சொத்துதகராறில் ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி க.விலக்கு அருகே உள்ள கருப்பத்தேவன்பட்டியை சேர்ந்த மாயாண்டித்தேவர் மகன் போஸ் (வயது40). ஆட்டோ டிரைவர். இவரது சித்தப்பா தெய்வம் மகன் குமார் (வயது 25). போசுக்கும், குமாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் நேற்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமார், அங்கிருந்த சுத்தியலை எடுத்து போசின் தலையில் ஓங்கி அடித்தார்.
இதனால் நிலைகுலைந்து போன போஸ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போசை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போசின் மனைவி ஜான்சி க.விலக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். சொத்து தகராறில் அண்ணனை சுத்தியலால் அடித்து தம்பி கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story